சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கான பரிந்துரையை, ஜனாதிபதியிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், குறித்த அமைச்சுப் பதவியை பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும், சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பை கையேற்க ஐக்கிய தேசியக் கட்சியின் வேறு எந்த உறுப்பினரும் முன்வரவில்லையென தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த அமைச்சுப் பொறுப்பை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனினும், பிரதமர் இந்த அமைச்சை பொறுப்பேற்றமை தொடர்பாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், சரத் பொன்சேகாவின் பெயரை மீண்டும் பரிந்துரைக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை மறுசீரமைப்பின்போது சரத் பொன்சேகா நாட்டில் இல்லாத காரணத்தால் பிரதமர் ரணில் அந்த அமைச்சுப் பொறுப்பை கையேற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.